12 Years a Slave

2013 ஆம் ஆண்டு வெளியாகி  சிறந்த படம், திரைக்கதை, துணை நடிகை என மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் உட்பட மேலும் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த ஹாலிவுட் திரைப்படம். பல விருதுகள் வாங்கி குவிக்கும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது இந்தப்படத்தில்? 
உலக வல்லரசாம் அமெரிக்காவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை  வெள்ளை எஜமானர்கள் கறுப்பினத்தவர்களை தங்களின்  சுயலாபத்திற்காக  எப்படி அடிமையாக அடக்கி ஒடுக்கினார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்தப்படம். 
அமெரிக்காவில் ஒரு காலத்தில் அடிமைத்தனம் என்பது சாதாரணமான விஷயம். எஜமானர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப, கறுப்பின மக்களை அடிமைகளாக விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆடு மாடுகளை போல கறுப்பின அடிமைகளும் எஜமானர்களுக்கு ஒரு  சொத்து.  இவன் என்னுடைய சொத்து (அடிமை) என்பதை குறிக்க ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு அடையாளம் தொங்கும் (இன்றைய கார்டு போல) அதனால் ஒருவருக்கு சொந்தமான அடிமையை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் தேவைப்பட்டால் ஆடுமாடுகளை வாங்கி விற்பது போல, அடிமைகளையும் எஜமானர்களுக்குள் வாங்கி விற்க உரிமை உண்டு.
                        
ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் இருந்த அடிமைமுறை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாநிலங்களில் மறைந்து கறுப்பின மக்கள் சுதந்திரமாக வாழ ஆரம்பித்தாலும், தென் மாநிலங்களில் இருந்த பெருவாரியான தொழில்களுக்கு அடிமைகள் தேவைப்படவே அடிமை முறையும் அங்கே ஒழியாமல் இருந்தது. 
தேவை அதிகம் இருப்பதால்  கறுப்பின மக்களை கடத்தி அடிமைகளாக விற்பதும் அங்கே சாதாரணம். அதாவது வட மாநிலங்களில் இருந்து சூழ்ச்சியால் மக்களை ஏமாற்றி,  ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற புதிய  அடையாளத்துடன் தென் மாநிலங்களில் அடிமையாக விற்றுவிடுவார்கள். அப்படி ஏமாந்த ஒருவர் தான் இந்தப்படத்தின் நாயகன் சாலமன். 
நியூயார்க்கில் தன் அழகிய குடும்பத்துடன் சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்ந்து வந்த சாலமன், ஒரு வேலை விஷயமாக வாஷிங்க்டன் சென்ற இடத்தில், சூழ்ச்சியால் அடிமையாக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்கப்படுகிறான். அடிமையாக விற்கப்பட்டவுடன் எந்தவித ஒரிஜினல் அடையாளமும்  இல்லாமல், எளிதாக தப்பித்து செல்ல முடியாது. ஒரு இடத்தில் இருந்து தப்பினால், யாராவது ஒருவர் பிடித்து வேறொரு இடத்தில் விற்றுவிடலாம். அல்லது கழுத்தில் தொங்கும் அடையாளம் கண்டு மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கலாம். அப்படி தப்பித்து மாட்டினாலோ அல்லது சரியாக கொடுத்த வேலையை செய்யாமல் போனாலோ, மரத்தில் கட்டி வைத்து முதுகு தோல் ரத்தம் சொட்ட சொட்ட கிழியும் படி சவுக்கடி கிடைக்கும். புரட்சி செய்தால் உயிரே போகும். உயிர் பிழைக்க ஒரே வழி, வலியை தாங்கிக்கொண்டு  கொடுத்த வேலையை செவ்வனே செய்வதே. 
12 வருடங்களுக்கு பின் அடிமை விலங்கில் இருந்து சாலமன் எப்படி விடுபட்டான் என்பது தான் இந்தப்படத்தின் ஒருவரி கதை. ஆனால் 12 வருடங்கள் அடிமையாக இருந்தபோது அவன் கண்ட காட்சிகளின் வழியாக கறுப்பின மக்கள் எந்த மாதிரியான சித்திரவதையை அனுபவித்தார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக கூறுகிறது இந்தப்படம். 
மனதை பிசையும் சில காட்சிகள் இங்கே. 
–  புதிதாக வந்திறங்கும் அடிமை கூட்டத்தில் ஒரு பெண்மணி, தன் குழந்தைகளை பிரிந்த துக்கத்தில்  அழுதுகொண்டே இருக்க, ‘இதெல்லாம் ஒரு விஷயமா.. இதுக்கு போய் அழுகிறாய்… போ போய் வேலையைப்பார்’ என்று சாதாரணமாக கூறுவாள் எஜமானி. இதற்கு அர்த்தம், கறுப்பர்கள் ஆசாபாசங்களே இல்லாமல் ஜடம் போல வாழவேண்டும். உங்களின் உணர்ச்சிகளுக்கு இங்கே மதிப்பில்லை என்பது தான். 
–  சாலமனை மரத்தில் தூக்கு போட்டு தொங்கவிட்டபடி ஓடிவிடுவார்கள். ஒற்றை விரலை தரையில் ஊன்றியவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பான் சாலமன்.சுற்றி மற்ற கறுப்பர்கள் எல்லாம் அவர்களின் வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். மற்றொரு கறுப்பினத்தவனுக்கு என்ன நடந்தாலும் கண்டுகொள்ளவே கூடாது. நில் என்றால் நிற்கவேண்டும். அவனை கொல் என்றாலும் கொல்ல வேண்டும்.
– வாழவும் முடியாமல் சாகவும்  முடியாமல் நரக வாழ்வு வாழும் பெண் Patsey,  சாலமனிடம் வந்து தயவுசெய்து என்னை தண்ணீரில் அழுத்தி கொன்று விடு. அது பாவம் அல்ல. இந்த பாவப்பட்ட ஜீவனுக்கு நீ கொடுக்கும் விடுதலை எனவே பாவம் என பார்க்காமல் என்னைக் கொன்றுவிடு என கெஞ்சும் காட்சி சொல்லும் கருப்பின பெண்மணியாக இருப்பது மிகவும் கொடுமை என்று. 
 
எஜமானுக்கு தேவைப்படும் போது உடல் சுகம் தரவேண்டும். எஜமானிக்கு அது தெரிய வரும்போது அவளின் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக வேண்டும். எஜமானன் கை படுகிறதோ இல்லையோ அந்த கறுப்பி அழகாக இருந்தால் எஜமானியின் கோபத்திற்கு நிச்சயம் ஆளாக வேண்டும்.  எங்கே ஒருநாள் தன் கணவன் அவளை எஜமானி ஆக்கி விடுவானோ என்ற ஒரு பயமும் ஒரு முக்கிய காரணம். 
 – சாலமனின் உண்மை அடையாள ஆதாரங்களுடன் வேண்டப்பட்டவர்கள் வந்து அழைத்து செல்லும் போது, அங்கே  Patsey கண்ணீருடன் நிற்கும் காட்சி சொல்லும், இது ஒரு தனிமனிதனுக்கான விடுதலை மட்டுமே. ஒட்டுமொத்த இடத்திற்கான விடுதலை அல்ல. ஆபிரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டு பதவியேற்று அடிமைமுறையை ஒழிக்க முயன்ற போது சில தெற்கு மாநிலங்கள் அதற்கு உண்டபடவில்லை. ஆனால் தொடர் முயற்சிகளுக்கு பின் அடிமைமுறை  1865 ஆம் ஆண்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக தெரிகிறது. 
முழுப்படத்தையும் Amazon Prime மற்றும் Netflixல் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். படம் பார்த்து முடித்ததும், இதைப்பற்றிய சில வரலாற்று குறிப்புகளை எடுத்து படித்துப்பாருங்கள். 
By 
வேல். 
12 Years a Slave by Steve McQueen, A True Story on American Slavery on Black People. 
Cast:
Chiwetel Ejiofor (Solomon Northup)
Michael Fassbender (Epps)
Lupita Nyong’o (Patsey)
Brad Pitt (Bass)
Image Source : IMDb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ponniyin Selvan – 2Ponniyin Selvan – 2

 பொன்னியின் செல்வன் – 2  ⭐⭐⭐.75/5  படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.  நாவலில் இருந்து நிறையவே மாற்றங்கள் செய்து கிடைத்த 3 மணி நேரத்தில் பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்களுக்கு closure கொடுத்து அவர்களின் பிண்ணனி கதை சொல்லி முடித்து இருக்காங்க

Emancipation – 2022Emancipation – 2022

Will Smith நடிப்பில் 1865 களில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை எதிர்த்து தப்பி வந்த Peter என்பவரின் வாழ்க்கையில் நடநத  உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.  சூப்பரான படம் 🔥 கண்டிப்பா பாக்கலாம்  Tamil dub ❌ Subs ✅ Shot

Dark Waters – 2019Dark Waters – 2019

Dark Waters Tamil Review  சுற்றுச்சூழலுக்கு கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக ஒரு கார்ப்பரேட் வக்கீல் நடத்தும் ஒரு நீண்ட சட்டப் போராட்டம் பற்றிய படம் இது‌.  உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.  IMDb  ‌‌7.6