The Invitation Tamil Review
இது ஒரு அருமையான சஸ்பென்ஸ் மற்றும் கொஞ்சம் திகில் கலந்த திரைப்படம். படம் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் நம்மை வைத்து உள்ளது. இந்த எதிர்பார்ப்பே படத்தின் மிகப்பெரிய பலம் எனலாம்.
வில் மற்றும் கிரா காரில் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். நடுவில் ஒரு ஓநாய் வந்து காரின் டயரில் சிக்கி குற்றுயிரும் கொலையுறுமாக உள்ளது. அதை மேலும் கஷ்டப்பட்டாமல் ஒரு இரும்பு கம்பியால் கொன்று பரலோகம் அனுப்புகிறான் வில். இந்த காட்சியில் இருந்தே எதை பற்றிய திரைப்படம் என இயக்குனர் யோசிக்க வைத்து விடுகிறார்.
இருவரும் பேசுவதில் இருந்து வில்லின் முன்னாள் மனைவி ஈடன் மற்றும் அவளுடைய தற்போதைய கணவன் டேவிட் ன் அழைப்பின் பேரில் பார்ட்டிக்கு அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
ஈடனின் வீட்டை அடைகின்றனர். அங்கு வில் மற்றும் ஈடனின் பழைய நண்பர்களும் பார்ட்டிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வீட்டில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் காரணமாக குழந்தையை வில் மற்றும் ஈடன் தம்பதிகள் இழந்து விட்டனர் என தெரிய வருகிறது.
வில்லிற்கு ஏதோ தப்பாக படுகிறது. வீட்டில் அனைத்து ஜன்னல்களும் இரும்பு கம்பியால் மூடப்பட்டிருப்பதை பார்த்த பின் அவன் சந்தேகம் வலுக்கிறது.
இயல்பாக ஆரம்பித்து நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் பார்ட்டியில் எவ்வாறு ஈடன் மற்றும் வில் குழந்தை இறந்த விஷயத்தை சமாளித்து மீண்டு வந்தார்கள் என பேச்சு வருகிறது.
ஈடன் தன்னுடைய புதிய கணவனான டேவிட்டை எவ்வாறு சந்தித்தாள் மற்றும் இரண்டு வருடங்கள் இருவரும் மெக்சிக்கோவில் The Invitation அமைப்பில் இருந்தது பற்றி கூறுகின்றனர்.
அந்த அமைப்பு கவலைகளில் இருந்து எவ்வாறு விடுபட உதவுகிறது என கூறி கொடுரமான வீடியோ ஒன்றையும் காட்டுகின்றனர். ஆனால் எவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பார்ட்டிக்கு புதிதாக ஒரு பெண் மற்றும் ஆண் இணைகிறார்கள். வில்லின் சந்தேகம் மேலும் கூடுகிறது.
யார் நல்லவர்கள் ? யார் கெட்டவர்கள்? புதிதாக பார்ட்டிக்கு வந்த இருவர் யார்? இந்த பார்ட்டியின் உண்மையான நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மைகள் இறுதிக்காட்சிகளில் தெரிய வருகிறது.
வில் கதாபாத்திரத்தில் வருபவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற அனைவரும் அவர்களின் பாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள்.
ஏற்கனவே சொன்னது போல் மெதுவாக நகர்ந்தாலும் திரைக்கதை உதவியுடன் ஆர்வமுடன் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர்.
மொத்தத்தில் பரபரப்பு இல்லாத ஆனால் போரடிக்காமல் போகின்ற திரைப்படம்.
Directed By: Karyn Kusama
Starring: Logan Marshall-Green, Emayatzy Corinealdi, Michiel Huisman