சினிஸ்டர் (Sinister) – 2012
இது ஒரு அருமையான திகில் திரைப்படம்.
இது போன்று பயமுறுத்தும் திகில் படங்களை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.
படத்தின் நாயகன் எல்லிசன் ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுவதில் கில்லாடி. கடந்த சில புத்தகங்கள் பிரபலமாகவில்லை அதனால் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கதை எழுதும் போது சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகில் வீடு வாங்கி அங்கேயே தங்கி கதை எழுதுகிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பழைய காலத்து வீடியோ டேப் காட்டப்படுகிறது. வீட்டின் பின்புறம் ஒரு குடும்பமே தூக்கில் தொங்க விடப்படுகிறது.
ஆனால் அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குழந்தை மட்டும் இந்த சம்பவத்திற்கு அப்புறம் காணாமல் போய்விடுகிறது.
எல்லிசன் அதே வீட்டிற்கு தான் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு குடி வருகிறான் தூக்கில் இடப்பட்ட குடும்பம் மற்றும் காணாமல் போன குழந்தையை வைத்து கதை எழுதுவது அவனுடைய குறிக்கோள்.
வீட்டில் பொருட்களை எடுத்து வைக்கும் பொழுது ஒரு பெட்டியில் பழைய காலத்து வீடியோ டேப்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறான். ஒவ்வொரு டேப்பிலும் எதை பற்றிய வீடியோ மற்றும் எந்த வருடம் எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதோடு அந்த டேப்பை பார்க்க உதவும் இயந்திரமும் உள்ளது.
அந்த டேப்களை பார்க்க ஆரம்பிக்கிறான்.
முதல் டேப் படத்தின் முதல் காட்சியில் வருவது மொத்த குடும்பத்தையும் தூக்கில் தொங்க விடுவது.
இரண்டாவது டேப் ஒரு குடும்பத்தை காரில் வைத்து உயிரோடு கொளுத்துவது.
இதே போன்று கொடுமையான டேப்கள் அந்த பெட்டியில் உள்ளது.
ஆனால் அனைத்து வீடியோக்களிலும் ஒரு தருணத்தில் அகோரமான முகம் கொண்ட ஒரு உருவம் மற்றும் ஒரு குறியீடு தெரிவதை கண்டுபிடிக்கிறான்.
இதற்கு நடுவில் வீட்டில் அசாதாரணமான விஷயங்கள் நடக்கின்றன. மகனுக்கு கொடுரமாக கனவுகள் வருகின்றன, காணாமல் போன குழந்தையின் படத்தை அவனுடைய சின்ன மகள் சுவற்றில் வரைகிறாள்.
இதற்கு நடுவில் லோக்கல் போலீஸ் அதிகாரி மற்றும் அமானுஷ்ய ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் உதவியுடன் வீடியோக்கள் எங்கு எடுக்கப்பட்டது இறந்து போனவர்களின் விபரங்கள் மற்றும் குறியீடுகள் பற்றிய விபரங்களை சேகரிக்க முயல்கிறான்.
அமானுஷ்ய சம்பவங்கள் எல்லை மீறி போக டேப் மற்றும் இயந்திரத்தை கொழுத்தி விட்டு வேறு வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.
அதன் பின் போலீஸ் அதிகாரி ஃபோன் செய்து இந்த கொலைகள் அனைத்தும் தொடர்பு உடையது என்றும் எல்லா கொலைகளின் முடிவிலும் குழந்தை ஒன்று காணாமல் போய்விடுகிறது என்கிறார்.
முந்தைய வீட்டில் இருந்து பேக்கிங் சர்வீஸ் நபர்கள் கொண்டு வந்து வைத்த அட்டை பெட்டியில் மறுபடியும் வீடியோ டேப்கள் உள்ளது. அதில் எக்ஸ்டென்ட் கட் ( Extended Cut) என எழுதப்பட்டுள்ளது.
அந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின் மயக்கம் அடைகிறான். அதன் பின் நடந்ததை படத்தில் பாருங்கள்.
பட திகிலூட்டும் காட்சிகள் பல உள்ளன. உதாரணமாக அட்டிக்கில் சத்தம் கேட்டு என்ன என்று பார்க்க செல்லும் காட்சிகள், தூக்கில் தொங்கிய இடத்தில் இரவில் நடக்கும் காட்சிகள் என சொல்லிக் கொண்டே போகலாம்
குறிப்பாக டேப்பில் காட்டப்படும் காட்சிகள் பீதியடைய வைக்கின்றன. அதுவும் அந்த புல் சமப்படுத்தும் இயந்திரம் வரும் காட்சி இதய துடிப்பை எகிற வைக்கும்.
பழைய காலத்து வீடியோ கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் வரும் ஒருவிதமான அசைவு திகில் காட்சிகளுக்கு நன்றாக உதவியுள்ளது.
திகில் பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Director: Scott Derrickson
Cast: Ethan Hawke, Juliet Rylance, Michael Hall D’Addario, Clare Foley, James Ransone
Screenplay: Scott Derrickson, C. Robert Cargill
Cinematography: Chris Norr
Music: Christopher Young
Watch Trailer: