ஹெர் (Her) – 2013
எதிர்காலத்தில் நடக்கும் கதை.
தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளன் அவன் வீட்டு கணினியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்ட OS (Operating System) மீது காதலில் விழுகிறார். இந்த வினோதமான காதல் நீடிக்குமா?
தியோடர் (ஜாக்யுன் பீனிக்ஸ் – Joaquin Phoenix) விவாகரத்திற்காக காத்திருக்கும் ஒரு எழுத்தாளர். அவர் handwrittenletters.com என்ற நிறுவனத்தில் பிறருக்காக பாசம் சொட்ட சொட்ட கடிதம் எழுதும் பணி. பக்கத்து வீட்டு பெண் மற்றும் நண்பியான ஏமி (ஏமி ஆடம்ஸ் – Amy Adams) தவிர வேறு யாருடனும் பேசுவது கிடையாது. வேலை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் சோசியல் நெட்வொர்க் மற்றும் வீடியோ கேம்ஸ் விளையாடி பொழுதைக் கழிக்கிறார்.
புதிதாக OS1 என்ற OS விளம்பரத்தைப் பார்த்த உடன் வாங்கி விடுகிறார். ஆனால் மற்ற OS போல இல்லாமல் இது மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு. ஏற்றவாறு மாற்றி கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டது. அது தனக்கு தானே சமந்தா (ஸ்கார்லெட் ஜான்சன்) என பெயர் சூட்டி கொள்கிறது. கொஞ்சம் நேரத்தில் அதை பிடித்து விடுகிறது.
கொஞ்சம் நாளில் அதனுடன் அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறார். சமந்தாவுடன் டேட்டிங் செல்கிறார் , அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பிக்னிக் அழைத்து செல்கிறார் (ஆம் OS ஐ தான் !)
இருவரும் காதலில் விழுகின்றனர்.
இந்த வினோதமான சாத்தியம் இல்லாத காதலின் முடிவு என்ன என்பதை படத்தில் காணுங்கள்
தியோடர் கதாபாத்திரத்தில் ஜாக்யுன் பீனிக்ஸ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சோகம் கலந்த தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளன் கதாபாத்திரம் கன கச்சிதமாக இவருக்கு பொருந்துகிறது.
சமந்தாவுக்கு குரல் கொடுத்தவர் ஸ்கார்லெட் ஜான்சன். திரையில் வராத குறை தெரியாமல் குரலிலேயே சமந்தாவாக வாழ்ந்து இருக்கிறார். என்ன ஒரு குரல் அவருக்கு !!! தியோடர் காதலில் விழுந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு உயிர் கொடுத்து உள்ளது.
பளீர் வண்ணங்கள் மற்றும் எதிர் காலத்தில் நகரம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்சிப்படுத்திய விதம் அருமை.
பிண்ணனி இசை படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறது. உதாரணமாக மனைவியை நேரில் சந்தித்து விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் இடுவார்கள். அப்போது பேனா பேப்பரில் எழுதும் போது வரும் சத்தத்துடன் மனைவியுடன் பகிர்ந்த சந்தோஷமாக இருந்த தருணங்களை அசை போடுவார். பல இடங்களில் மென்மையான இசை மனதை வருடி செல்லும்.
ஷபைக் ஜொன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். மிகச்சிறந்த ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள்.
இப்பொழுது உள்ள கால கட்டத்தில் சிரி, கூகுள் அசிஸ்டன்ட் என பல AI நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதே போல சென்றால் AI உடன் டேட்டிங் செய்யத் தொடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை சொல்வதை போல தெரிகிறது..
நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது : https://www.netflix.com/title/70278933?s=a&trkid=13747225&t=cp