மான்டேஜ் (Montage) – 2013
வழக்கை கையாண்ட அதிகாரி காணாமல் போன குழந்தையின் தாயிடம் சென்று இன்னும் 5 நாட்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற தகவலை கனத்த மனதுடன் சொல்கிறார். குழந்தையின் தாய் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அதிகாரியோ 15 வருடங்கள் ஆகியும் தன்னால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனதே என்ற விரக்தியிலும் குற்ற உணர்ச்சியிலும் தவிக்கிறார்.
இந்த 5 நாட்களில் அவனை கண்டுபிடிக்க ஒரு இறுதி முயற்சி எடுக்கிறார். அதிர்ஷ்டவசமாக இது சம்பந்தமாக ஒரு துப்பு கிடைக்கிறது. அதை நூல் பிடித்துக்கொண்டு பின் தொடர்கிறார். ஆனால் கண்முன்னே மாட்டிய அந்த குற்றவாளி மயிரிழையில் தப்பித்து விடுகிறான். 5 நாட்கள் முடிகிறது, வழக்கும் இழுத்து மூடப்படுகிறது.
இந்த சமயத்தில், தன் தாத்தாவுடன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடிரென்று காணாமல் போகிறது. 15 வருடங்களுக்கு முன் அந்த குழந்தை எப்படி காணாமல் போனதோ அதே போல சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதால் ஒரு வேளை தப்பித்த குற்றவாளி தான் மீண்டும் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டானோ என்று போலீஸின் முழுக்கவனம் அந்தப்பக்கம் திரும்புகிறது.
மறுபுறம், குற்றவாளியின் கார் மற்றும் தவறவிட்ட குடை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக இறங்குகிறாள் குழந்தையின் தாய். ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் தாய் என ஒரே குற்றவாளியை நோக்கி பயணம் செய்கிறார்கள்.
குழந்தையை கடத்தியவன் போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறான். தாத்தாவை மட்டும் தனியாக வந்து பேசும் படி அழைக்கிறான். திடீரென குழந்தையின் தாத்தாவும் காணாமல் போகிறார். என்ன ஆனார் என்பது தெரியாது. அனைவரும் குழந்தையை மீட்பதில் குறியாக இருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்து போலவே, ஒரு கூட்டம் மிகுந்த ரயில்வே ஸ்டேஷனில் வைத்து பணத்தை பரிமாற்ற சொல்லி கேட்கிறான். சுற்றி போலீஸ் கண்காணிப்பு இருந்தும், அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பணத்தை லாவகமாக எடுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன். துரத்திச்சென்று பிடித்து யாரென்று பார்த்தால் குழந்தையின் தாத்தா.
கடத்தியவன் தான் தன்னை பணத்தை எடுத்து வந்து கொடுக்க சொல்லி சூழ்ச்சி செய்ததாக சொல்கிறார் தாத்தா. முதலில் அவர் கூறுவது உண்மையாக தெரிந்தாலும், டெலிபோன் குரல் மற்றும் சில சம்பவங்கள் சாட்சியங்களின் அடிப்படையில், குழந்தையின் தாத்தா தான் குற்றவாளி என முடிவு செய்கிறார்கள்.
ஆனால் பழைய வழக்கை விசாரித்த அந்த போலீஸ் அதிகாரிக்கு திருப்தி இல்லை. தாத்தா தான் கடத்தினார் என்றால் குழந்தை எங்கே என்று சக அதிகாரிகளுக்கு சவால் விடுகிறார். குழந்தையை எங்கோ கொன்று புதைந்திருக்கலாம், அதை விசாரணையில் வெளி கொண்டு வர வேண்டும் என்று சமாளித்து மழுப்பி தாத்தா தான் குற்றவாளி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதில் உடன்பாடு இல்லாத அதிகாரி, உண்மையான குற்றவாளி இன்னும் வெளியே தான் இருக்கிறான் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து துப்பறிகிறான்.
மறுபக்கம், தனியாக துப்பறிந்து வந்த தாய், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அவன் வீட்டுக்கே சென்று விடுகிறாள். அங்கே யாரும் இல்லாததால், வீட்டினுள் நுழைந்து அங்கே இருக்கும் சில ஆதாரங்கள் மூலம் அவன் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறாள்.
யார் அந்த உண்மையான குற்றவாளி? குழந்தையை காப்பாற்றினார்களா? என்பதை கடைசி சில நிமிடங்களில் பரபரப்பான திருப்பங்களுடன் சொல்கிறது இந்தப்படம்.
மைனஸ் (-)
15 வருட வித்தியாசம் நடிகர்களின் முகங்களில் தெரியவில்லை.
சில காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தானமாக இருக்கிறது, மற்றபடி படம் அருமை.
பிளஸ் (+)
இறுதி காட்சிகளில் தான் மேஜிக்கை காண்பிக்கும் திரைக்கதை.
நடிகர்களின் நடிப்பு. முக்கியமாக தாயாக வரும் Uhm Junghwa-ன் நடிப்பு அருமை.
பின்னணி இசை கட்டிப்போடுகிறது.
By,
வேல்