தி ப்ரஸ்டீஜ் (The Prestige) – 2006
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் நடக்கும் கதை. இரண்டு மேஜிக் வித்தகர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியை பற்றி பேசுகிறது.
யாருக்கும் எளிதில் புரியாதபடி படமெடுப்பதில் கில்லாடியான கிறிஸ்டோபர் நோலன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் எனவே இது ஒரு வழக்கமான படமாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டு தான் படத்தைப் பார்க்க வேண்டும்.
“நீங்கள் கூர்ந்து கவனிக்கிறீர்களா.?” என்ற வசனத்துடன் தான் படம் துவங்கும். ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் நீங்கள் கூர்ந்து நோக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி தான் அந்த கேள்வி.?
புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் ராபர்ட்டை அவருடைய தொழில் போட்டியாளர் ஆல்பர்ட் கொன்றுவிட்டதாக ஒரு வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் ஆல்பர்ட் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
ஆல்பர்ட் எதற்காக ராபர்ட்டை கொல்ல வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? என்ற கேள்வியுடன் தன் வித்தையை காண்பிக்க ஆரம்பிக்கிறது படம்.
ராபர்ட்டும் ஆல்பர்ட்டும் ஒரே சர்க்கஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தருணம். அன்றைய தினம் ராபர்ட்டின் காதலி தான் வழக்கமாக செய்யும் ஒரு சாகசத்திற்கு தயாராகிறாள். அதாவது, அவளின் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு தண்ணீர் நிரம்பிய தொட்டிக்குள் அடைக்கப்படுவாள். அதன் பின்பு தொட்டி திரையால் மூடப்படும். அடுத்த சில வினாடிகளில் அந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு திரையின் வெளியே தோன்றுவாள். இது தான் மேஜிக்.
வழக்கமாக ராபர்ட் கால்களையும், ஆல்பர்ட் கைகளையும், எளிதில் பல்லால் கடித்து அவிழ்க்கும் படி முடிச்சு போட்டு கட்டிவிடுவார்கள். அன்றும் அதே போல நடக்க, ஆல்பர்ட் மறந்து போய் வேறுவிதமான ஒரு முடிச்சை அவள் கைகளில் போட்டு விடுகிறான். அதை எளிதில் அவிழ்க்க முடியாமல் போகவே ராபர்ட்டின் காதலி அவன் கண் முன்னாலே மேடையில் வைக்கப்பட்ட அந்த பெரிய தண்ணீர் தொட்டியில் முழ்கி இறந்து போகிறாள்.
இந்த சம்பவத்திற்கு பின், இருவரும் பிரிந்து சென்று தனித்தனியாக மேஜிக் ஷோ நடத்துகிறார்கள். முதலில் காதலியின் மரணத்திற்காக ஆல்பர்ட்டை பழிவாங்க துடிக்கிறான் ராபர்ட். ஆனால் பிரிந்து சென்ற ஆல்பர்ட் தொழிலில் மிகவும் அசாத்தியமான மேஜிக் வித்தைகளை செய்து புகழ் பெறவே, அவனை பழிவாங்குவதை விட்டுவிட்டு அவனின் தொழில் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காண்பிக்க ஆரம்பிக்கிறான்.
முக்கியமாக “The Transported Man” என்கிற வித்தையின் ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்ள பல விதங்களில் முயற்சி செய்கிறான் ராபர்ட். அது என்ன வித்தை? மேடையில் எந்தவித இணைப்பும் இடையே இல்லாமல் 20 அடி இடைவெளியில் இரண்டு கதவுகள். ஒரு கதவின் வழியே நுழைந்து, கண நொடியில் மற்றொரு கதவின் வழியே வெளியேறுவது தான் அந்த வித்தை.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மனிதன் 20 அடி தூரத்தை கடக்கிறான் என்றால், இது நிச்சயம் இரட்டையர்களை கொண்டு தான் செயல்படுத்த முடியும் என்று உறுதி செய்து அதே இரட்டையர் யுக்தியை தன்னுடைய சர்கஸில் செயல்படுத்தி பார்க்கிறான். எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது. ஆனாலும் அவனுக்கு திருப்தியில்லை. ஆல்பர்ட் வேறு நிச்சயம் ஏதோ ஒரு ரகசியம் வைத்திருக்கிறான் என்பதை ஆணித்தரமாக நம்புகிறான். அதை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று பித்துப்பிடித்துப்போய் அலைகிறான்.
18ஆம் நூற்றாண்டில் நடப்பதால், நிகோலா டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் எல்லாம் கதைக்குள் வந்து செல்கிறார்கள். டெஸ்லா செய்து கொடுத்த ஒரு இயந்திரத்தின் மூலம் தான் ஆல்பர்ட் அந்த வித்தையை செய்ய முடிகிறது என்பதை அறிந்து, ராபர்ட்டும் டெஸ்லாவிடம் சென்று தனக்காக மனிதனை இடம் பெயர வைக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுங்கள் என்கிறான்.
டெஸ்லாவோ, நான் யாருக்கும் அப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுக்கவில்லை என்றும் ஆனால் அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என்றும் சொல்கிறார். ராபர்ட்க்கு ஒரு இயந்திரத்தை உருவாக்கி தருவதாகவும் உறுதியளிக்கிறார்.
டெஸ்லா அந்த இயந்திரத்தை செய்து கொடுத்தாரா? ராபர்ட் தன் முயற்சியில் ஜெயித்தானா? ஆல்பர்ட் ராபர்ட்டை கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஜிக் என்றால் என்ன? நோலனின் இந்த திரைக்கதையே ஒரு மேஜிக் என்பதை படம் பார்த்து முடிந்ததும் புரிந்து கொள்வீர்கள்.