ஆர்கோ (Argo) – 2012
3 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இத்திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
1979 வது வருடம் ஈரான் நாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த உள்நாட்டு கலவரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்க தூதரக அதிகாரிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக மீட்டனர் என்பதை பற்றிய திரைப்படம்.
படம் ஒரு சின்ன பிளாஷ்பேக் உடன் ஆரம்பிக்கிறது. 1953 வது வருடம் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன் ஷா என்பவர் ஈரான் அதிபராக பதவி ஏற்கிறார். இவர் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது மட்டுமல்லாமல் அவை விளம்பரப்படுத்தி காரணத்தினால் 1979ஆம் வருடம் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுகிறார். அதன்பின் எகிப்திற்கு நாடுகடத்தப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்.
ஆனால் ஈரான் மக்கள் ஷா விசாரணைக்கு ஈரான் வர வேண்டும் அமெரிக்கா அவரை அனுப்ப வேண்டும் என்று போராட்டம் செய்கின்றனர். 4 , நவம்பர் 1979 ல் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நடந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறுகிறது. தூதரகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் மொத்தம் இருந்த 72 பேரில் 66 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றனர். 6 நபர்கள் மட்டும் வேறு வழியாக தப்பித்து பக்கத்தில் உள்ள கனடா நாட்டு தூதரகத்தில் அடைக்கலம் ஆகின்றனர். அதிகாரிகள் முன்னேற்பாடாக தூதரகத்துக்குள் இருந்த அனைத்து முக்கியம் ஆவணங்களையும் அழித்து விடுகின்றனர். இதனால் எவ்வளவு அதிகாரிகள் உள்ளே இருந்தனர் என்பது போராட்டகார்களுக்கு தெரியாமல் போகின்றது.
அமெரிக்காவில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. 66 பிணைக்கைதிகளை மீட்பதற்கு ஈரான் அரசு வழியாக பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர். ஆனால் தப்பி 6 பேரை எவ்வாறு மீட்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இம்மாதிரியான மீட்புப் பணிகளில் திறமைவாய்ந்த சிஐஏ ஏஜெண்ட் டோனி மெண்டஸ்ஸை (Ben Affleck) அழைக்கின்றனர். டோனி தற்பொழுது ஒரு திட்டமும் கைவசம் இல்லை என்றும் ஏதாவது திட்டம் வகுத்து விட்டு கால் செய்கிறேன் என்கிறார்.
வீட்டில் அவர் மகனுடன் வேற்று கிரகவாசிகள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது புதிய ஐடியா உருவாகிறது.
அவருடைய மேலதிகாரியான ஜாக்குக்கு (Bryan Cranston நம்ம பிரேக்கிங் பேட் ப்ரொஃபஸர் தாங்க..) போன் செய்து வேற்றுகிரக வாசிகள் பற்றி படம் எடுக்கிறோம் என்றும் அதற்கான லொகேஷன் களைப் பார்க்க ஈரானுக்கு வந்த குழு என்று பொய் சொல்லி பிணைக் கைதிகளை விட்டு விடலாம் என்கிறார்.
மறுபடியும் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்படுகிறது எவருக்கும் இந்த திட்டத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் வேறு வழியில்லாமல் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
தான் ஒரு கனடா நாட்டு சினிமா தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி விசா வாங்கி ஈரான் சென்று ஆறு நபர்களையும் கனடா தூதர் வீட்டில் சந்திக்கிறார்.
எவருக்குமே நம்பிக்கை இல்லாத இந்த திட்டத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் எவ்வாறு ஆறு நபர்களையும் சம்மதிக்க வைத்து அவர்களுக்கு தேவையான போலி ஆவணங்களை தயார் செய்து அனைவரையும் மீட்டாரா என்பது மீதிக்கதை. |
படம் முழுவதும் பரபரப்பாகவே செல்கிறது. அதுவும் டோனி ஈரானின் பிணைக் கைதிகளை சந்தித்த பிறகு படம் படு வேகத்தில் செல்கிறது.
படத்தின் முடிவு பகுதியில் ஈரானின் புரட்சிப் படையின் 3 அடுக்கு பாதுகாப்பு களை மீறி விமான நிலையத்திற்குள் நுழையும் காட்சிகள் மற்றும் அவர்கள் ஆவணங்களை சரி பார்க்கும் காட்சிகள் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும்.
நாயகனான Ben Affleck சிஐஏ ஏஜெண்ட்டாக கலக்கியிருக்கிறார். உடன் வரும் கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இயக்குனரும் இவரே.
மிக அருமையான திரைக்கதை மற்றும் இயக்கம்.
ஒளிப்பதிவு ஈரானை இயல்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு மூன்று ஆஸ்கர் விருதுகளை (சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த திரைக்கதை) வாங்கிய இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.